search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
    X

    பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை காணலாம்.

    சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

    • உண்ணாவிரத போராட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மிகவும் போராடி 8 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டு, 5 தளங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி:

    சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நகராட்சி பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் சொத்து வரி, பால் விலை உயர்வு, தேங்காய் விலை வீழ்ச்சி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பேசியதாவது:-

    எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மேற்கு புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டு, 50 சதவீத பணிகள் முடிந்திருந்தது. ஆனால் கடந்த ஓராண்டாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று கோவைக்கு மாற்றுப்பாதையாக கோவில்பாளையம்-வெள்ளலூர் சாலை அகலப்படுத்தும் திட்டத்தையும் ரத்து செய்துள்ளனர்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மிகவும் போராடி 8 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டு, 5 தளங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் அதன் பிறகு மத்திய அரசு நிதி தருவதாக கூறியும் தி.மு.க. அரசு போதிய நோயாளிகள் இல்லை என்று கூறி கட்டிடம் கட்டாமல் இருக்கிறது. ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு நிதி கொடுக்கப்பட்டும் பணிகளை நிறுத்தி உள்ளனர். இதுபோன்று பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ண குமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல் முத்துகருப்பணன், திருஞானசம்பந்தம், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×