search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    15 நாட்களுக்கு பின்னர் ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
    X

    15 நாட்களுக்கு பின்னர் ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

    • சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.

    தற்போது பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏற்காட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன.

    குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

    கிட்டத்தட்ட 2 ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கையாக விடுத்தனர்.

    மேலும் இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் கோரிமேடு வழியாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையை சீரமைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3 வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 24-ந்தேதி தொடங்கின.

    இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதர இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அயோத்தி யாப்பட்டணம்-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலை வழியாக சென்றன.

    15 நாட்களுக்கும் மேலாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் . இதனிடையே சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

    இந்நிலையில் சாலை பணிகள் ஓரளவு முடிவுற்ற நிலையில் இன்று அதிகாலை முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் குப்பனூர் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. முன்பு போல சேலம்-ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனினும் கூடுதலாக காவலர்களை சோதனை சாவடியில் நிறுத்தி வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×