search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 நாட்களுக்கு பின்னர் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    5 நாட்களுக்கு பின்னர் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    • தென்காசி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • மெயினருவியில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அணைகளுக்கும், அருவிகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகளவு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை முதல் மழை குறைந்துள்ளது. இன்று காலை வரை அதிகபட்சமாக கடனாநதி பகுதியில் 12 மில்லிமீட்டரும், குண்டாறு பகுதியில் 9 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட அணையின் நீர்மட்டம் 91.60 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 95.05 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2803.94 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1004.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 127.56 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு நீர்மட்டம் 74.10 அடியாகவும் உள்ளது.

    அதேபோல் தென்காசி மாவட்ட மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அடவிநயினார் அணைநீர்மட்டம் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 116.75 அடியாக உள்ளது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 83 அடியாகவும், 84 அடி உள்ளது.

    அணைகள் நிரம்ப இன்னும் 2 அடியே தேவை என்பதால் பாதுகாப்பு கருதி கடனா மற்றும் ராமநதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    உசிலம்பட்டி சின்னவீர தேவர் தெருவை சேர்ந்தவர் வீரவேல். இவர் தனது குடும்பத்தினருடன் பாபநாசம் கோவிலுக்கு வழிபடுவதற்காக இன்று வந்தார்.

    முன்னதாக அவர்கள் பாபநாசத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட அவரது மகன் கோட்டைசாமி (வயது 17) என்பவர் தண்ணீரில் மூழ்கினார்.

    உடனடியாக தகவல் அறிந்து அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தென்காசி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 5 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் மழை குறைந்ததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிதமான அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய 4 அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    சீசன் காரணமாக தண்ணீர் அதிகமாக விழுந்தாலும் கடந்த 5 நாட்களாக குளிக்க அனுமதி இல்லாத நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டதாலும், விடுமுறை தினம் என்பதாலும் இன்று ஏராளமானோர் அருவிகளில் திரண்டனர்.

    மெயினருவியில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×