search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு 250 கவுண்டர்களில் உணவு- மதுரையில் மாநாட்டுப்பணிகள் தீவிரம்
    X

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு 250 கவுண்டர்களில் உணவு- மதுரையில் மாநாட்டுப்பணிகள் தீவிரம்

    • எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
    • லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என 3 வகையான சாதங்கள் தொண்டர்களுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் பொது செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்முறையாக மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதுரை மாநாட்டில் ஏராளமான தொண்டர்களை திரள செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்களை அதிகளவில் வாகனங்களில் அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் மதுரை மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 10 லட்சம் பேருக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை ரிங் ரோட்டில் உள்ள வலையன்குளம் பகுதியில் அமைந்துள்ள மாநாட்டு மைதானம் சுமார் 50 ஏக்கர் பரப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு திடலில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டு திடலில் ஆங்காங்கே தொண்டர்களுக்கு உணவு வழங்கும் வகையில் 250 கவுண்டர்கள் அமைத்து உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவுண்டர்களிலும் 6 பேர் பணியமர்த்தப்பட்டு தொண்டர்களுக்கு உணவுகளை விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில் உணவு மற்றும் குடிநீர் வழங்க சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என 3 வகையான சாதங்கள் தொண்டர்களுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக தஞ்சை பகுதியில் இருந்து சுமார் 3,000 மூட்டை அரிசி மாநாடு திடலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது தவிர உணவு அருந்துவதற்கு தேவையான தட்டுகள், குடிநீர் பாட்டில்கள் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டு மைதானத்தில் 50 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் லாரிகள், மினி வேன்கள் மூலமும் தண்ணீர் சப்ளை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் மாநாட்டு திடலில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து வருகிறார்கள். மேலும் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களும் மாநாடு குழுவில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளும் மதுரையில் முகாமிட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    எனவே மதுரை மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பார்கள் என்றும், அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த தொண்டர்களும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் வகையில் மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாடு அமோகமாக நடைபெறும் என்று அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×