search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தியா கூட்டணியிடம் தான் வாக்கு வங்கி உள்ளது- டி.ஆர்.பாலு எம்.பி.
    X

    இந்தியா கூட்டணியிடம் தான் வாக்கு வங்கி உள்ளது- டி.ஆர்.பாலு எம்.பி.

    • என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?
    • ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் திலகர் திடலில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்கிற பாராளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி. பேசியதாவது:-

    கடந்த 2019-ம்ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், அப்பலவீனத்தைப் பயன்படுத்தி பா.ஜனதா வெறும் 37 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி வெற்றி பெற்றது. அதனால்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இதிலிருந்து எத்தனை பேர் விலகி சென்றாலும், இந்தியா கூட்டணியிடம் தான் வாக்கு வங்கி உள்ளது.

    விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வருவதற்கான காலம் வந்துவிட்டது என 2011-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், நரேந்திர மோடி கூறினார். அச்சட்டத்தைத் தயார்படுத்த அரசு வக்கீலின் ஆலோசனைப்படி உணவு பாதுகாப்பு சட்டமும், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அடுத்து குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், மோடி பிரதமராகி 10 ஆண்டுகளாகியும் அச்சட்டத்தை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், 3 கருப்பு சட்டங்களை கொண்டு வந்தார்.

    தமிழ்நாட்டுக்கு மெட்ரோ 2-வது திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை, வெள்ளச்சேதத்துக்கு இழப்பீடு கொடுக்க மறுப்பு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது.

    வெள்ள நிவாரணம் கோரி நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது, தனது துறைக்கு தொடர்பில்லாத மத்திய இணை மந்திரி எல். முருகன் இடையூறு செய்யும் நோக்கில் குறுக்கே, குறுக்கே பேசினார். அதனால், ஒன்றுமே தெரியாத நீங்கள் உட்காருங்கள் என கூறினேன். ஜாதி, மதம், நிறம் எதுவும் எங்கள் இயக்கத்துக்கு தெரியாது. அனைத்து சமயத்தினரும், ஜாதியினரும் எங்களுக்கு வேண்டியவர்கள்தான். என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கார்ப்பரேட் நிதி 33 சதவீதம் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு சதவீதத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11 சதவீதத்துக்கு எவ்வளவு இழப்பாகியுள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வளவும் பெரிய முதலாளிகளுக்கு இந்த அரசு சலுகை செய்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, நான் முதல்வர் திட்டம், காலை உணவு திட்டம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பயனாளிகள் பயடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். எனவே, நமது முதல்வரை மக்கள் நம்பிக்கை, உறுதி, விருப்பம், வெற்றி, எதிர்காலம் எனக்கருத வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×