என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மதுரை வழியாக அனைத்து ரெயில்களும் இன்று முதல் வழக்கம்போல் இயங்கின- பாதுகாப்பாக இயக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
- இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடந்து வந்தன.
- மதுரை ரெயில் நிலையத்தில் புதிதாக கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் ஆகியவை நிறுவப்பட்டு உள்ளன.
மதுரை:
மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடந்து வந்தன. எனவே அந்த வழியாக செல்லும் ஒருசில ரெயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரெயில்கள் அருப்புக் கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து மதுரை ரெயில் நிலையத்தில் புதிய மின்மயமாக்கல், ரெயில் பாதை இணைப்புகள், சைகை மின்னணு கைகாட்டி, காலி ரெயில் பெட்டிகளை ரெயில் நிலையத்தில் இருந்து எடுத்து செல்ல தனிப்பாதை அமைப்பு, ரெயில் என்ஜின்கள் நிறுத்த தனி ரெயில் பாதை, புதிய நடைமேடை, நடைமேடை நீட்டிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடந்தன. அவை நேற்றுடன் முடிந்தன.
எனவே ஏற்கனவே மதுரை வழியாக சென்று வந்த அனைத்து ரெயில்களும் இன்று(8-ந்தேதி) முதல் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ரெயில் நிலையத்தில் தினமும் சராசரியாக 65 பயணிகள் ரெயில், 10 சரக்கு ரெயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.
மதுரை ரெயில் நிலையத்தில் புதிதாக கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் ஆகியவை நிறுவப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம் ரெயில்கள் பாதுகாப்பாக இயக்கப்பட உள்ளன. இதற்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் 75 செ.மீ. அகல கணிப்பொறி திரைகள் நிர்மானிக்கப்பட்டு உள்ளன.
இதில் ரெயில் பாதை அமைப்புகள், கலர் விளக்கு சிக்னல், ரெயில் பாதை பாய்ண்ட் இணைப்புகள் ஆகியவை உள்ளன. எனவே நிலைய அதிகாரி கணிப்பொறி "மவுஸ்" மூலம் ரெயில்களின் பாயிண்டுகளை நேர் செய்வது, சிக்னல் விளக்குகளை ஒளிரச் செய்வது போன்றவற்றை எளிதாக செய்யலாம். அதேபோல் எந்தெந்த பாதைகளில் ரெயில்கள் உள்ளன? என்பதையும் தெளிவாக அறிய இயலும்.
தென்னக ரெயில்வேயில் மதுரை ரெயில் நிலையத்தில் தான் அதிக அளவில் 385 ரெயில் பாதைகள், 88 ரெயில் பாதை இணைப்புகள், 100 சிக்னல் வயரிங் அமைப்புகள் ஆகியவை உள்ளன. இந்த மின்னணு தொழில்நுட்பம் கடந்த 2012-ம் ஆண்டு மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு தேனி அகல ரெயில்பாதை தொடக்கத்தின் போது மேலும் மெருகூட்டப்பட்டது.
மதுரை ரெயில் நிலையத்தில் சமீபத்தில் இணைப்பு பணிகள் நடந்தபோது, அதில் மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் நிலைய அதிகாரிகள் விரைவாக முடிவு எடுத்து ரெயில்களை தாமதம் இன்றி பாதுகாப்புடன் இயக்க முடியும்.
திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரெயில் நிலையத்திலும் ரெயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக, புதிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் திருச்சி-நெல்லை மற்றும் செங்கோட்டை-புனலூர் ஆகிய பிரிவுகளில் உள்ள ரெயில் நிலையங்களில் புதிய மின்னணு சைகை தொழில்நுட்பம் வாயிலாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்