என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கர்நாடகாவுக்கு சென்றால் 'கோ பேக் ஸ்டாலின்' போராட்டத்தை பா.ஜனதா நடத்தும்- அண்ணாமலை
- பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார்.
- காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்யவில்லை.
சென்னை:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். அவருக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணைகட்டும் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் பெரிதாகி இருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகத்துக்கு சென்றால் 'கோ பேக் ஸ்டாலின்' போராட்டத்தை பா.ஜனதா நடத்தும். விமான நிலையம் அருகே போராட்டம் நடத்தப்படும். கருப்பு பனியன்கள் அணிந்தும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்யவில்லை. ஏற்கனவே முல்லை பெரியாறு விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமையை தி.மு.க. விட்டுக்கொடுத்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.






