search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது பா.ஜ.க. நோக்கமல்ல- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
    X

    கார் வெடித்த இடத்தில் இருந்து பொதுமக்கள் எடுத்துக் கொடுத்ததாக கூறி கோலிக்குண்டு, ஆணிகளை அண்ணாமலை காண்பித்த காட்சி.

    தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது பா.ஜ.க. நோக்கமல்ல- அண்ணாமலை பரபரப்பு பேட்டி

    • இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர்.
    • குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    கோவைக்கு வர இருந்த பெரிய ஆபத்தை கோட்டை ஈஸ்வரன் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், இதற்கு நன்றி கூறும் வகையில் கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க கோவை வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    இன்று காலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவைக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர். கோவிலில் அண்ணாமலை கோட்டை ஈஸ்வர சுவாமியை பயபக்தியுடன் வழிபட்டார். தொடர்ந்து மக்கள் நலம் பெற வேண்டி நடந்த கூட்டு பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.

    தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து அண்ணாமலை பார்வையிட்டார். அப்போது கோவிலின் தல வரலாறு உள்ளிட்ட தகவல்களை பூசாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் வெளியில் வந்த அவர் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து கோவில் பூசாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி பாடினார்.

    பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மக்கள் எடுத்து கொடுத்ததாக கூறி பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளையும் அண்ணாமலை காண்பித்தார்.

    கோவை 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்புக்கு பிறகு பின்னோக்கி சென்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மிக கடினமாக போராடி கோவையில் உள்ள மக்கள் தொழில் அதிபர்கள் இணைந்து கோவையை முன்னெடுத்து சென்றுள்ளனர்.

    இந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு விபத்து, தற்கொலைப்படை தாக்குதல் நடந்து இருந்தால் நினைத்து பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருக்கிறது. நிச்சயமாக கோவை 20 வருடம் பின்னோக்கி சென்று இருக்கும். அதை தடுத்து நிறுத்தியது நம்மை காக்கும் கடவுளாக இருக்கும் காவல் துறை நண்பர்கள்.

    இந்த விபத்து நடந்த பிறகு மிக துணிவாக காவல்துறையினர் இதனை அப்புறப்படுத்தினர். குற்றவாளிகளை கைது செய்து, அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களை கைப்பற்றினர். தங்களது உயிரை பணயம் வைத்து வேறு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்து கொண்டனர். அவர்களுக்கு நன்றி.

    இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். இது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் தீய மனிதர்கள் நோக்கம் இதுபோன்ற வெடி விபத்தை நடத்தி மதத்தை வைத்து கோவையை பிரித்து சூழ்ச்சியாடி, தமிழகத்தை பிரித்து சூழ்ச்சியாடி மக்களிடம் இருக்கும் ஒற்றுமை உணர்வை குறைப்பதற்காக தான் இந்த முயற்சி நடந்துள்ளது.

    நாம் சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தான் கூறுகிறோம். அவர்களுக்கு எந்தவிதமான மதசாயத்தையும் கூட பூசவில்லை.

    சனதான தர்மத்தின் அற்புதம் என்னவென்றால், எந்த மனிதனையும் வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. ஒன்றாக செல்ல வேண்டும். கோவை மாநகரில் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் நீங்கள் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடாது. இது தவறான முன் உதாரணம். மதகுருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி யாராவது இளைஞர்கள் தவறான வழித்தடத்தில் சென்றாலும் கூட சொல்வது நமது கடமை.

    மக்கள் எடுத்துக்கொடுத்த பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளை பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.

    மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மாநில அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மட்டுமே நாங்கள் சொல்லி வருகிறோம். தொடர்ந்து கருத்துக்களை சொல்வோம். அதனால் நாங்கள் சொல்வது யாருக்கும் எதிரானது கிடையாது.

    தொடர்ந்து பா.ஜனதா கட்சி போலீஸ் உயர் அதிகாரிகளை கேட்கின்ற கேள்வி இங்கே சில தவறுகள் நடந்து இருக்கிறது. திருத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

    அடுத்த கட்ட தாக்குதல் நடந்த பிறகு நாங்கள் உங்களை பார்த்து, நீங்கள் எங்களை பார்த்து குற்றம் சொல்லாமல் சரியான நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்காக தான் கேள்வியை எழுப்பி வருகிறோம்.

    கடந்த ஜூன் 19-ந் தேதி மத்திய உளவுத்துறை தமிழகத்தில் இது போன்ற 96 நபர்கள் ஐ.எஸ்.எஸ். மூளை சலவை செய்யப்பட்டவர்கள், கைதானவர்களை கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    இதில் 89-வது நபராக இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முபினின் பெயர் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டும் என கூறியும் அது நடக்காததால் இந்த தவறு நடந்து இருக்கிறது.

    மக்களை எச்சரிக்கைப்படுத்துவது காவல்துறையின் தலையாய பணி. பொதுமக்களுக்கு உண்மையை சொல்வதால் யாரும் எதுவும் தவறாக நினைக்க போவதில்லை. அதனை வெளியில் சொல்ல வேண்டும். அதனை சொன்னால் மக்களுக்குள் பிளவு வந்து விடும் என்பது கிடையாது.

    குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர். ஐ.எஸ். கொள்கை என்பது பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. இஸ்லாமிய குருமார்களே சொல்கின்றனர்.

    நல்ல குருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவையை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கார் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவை மாவட்ட பா.ஜ.க. அறிவித்திருந்தது. பின்னர் வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.க.வினர் தங்களது கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

    ஏற்கனவே மாவட்ட பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    அண்ணாமலை வருகையை முன்னிட்டு அந்த பகுதிக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிமாவட்ட போலீசார் என 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வழியாக வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை கேட்டு பெற்று ஆராய்ந்து விசாரித்த பின்னரே அந்த பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.

    இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    Next Story
    ×