search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உதவிய ரவுடி கும்பல்கள் ஆந்திராவுக்கு ஓட்டம்
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உதவிய ரவுடி கும்பல்கள் ஆந்திராவுக்கு ஓட்டம்

    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பதால் போலீஸ் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
    • வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலேயே ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டு சென்னையில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூரை சேர்ந்த திருவேங்கடம் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் மற்ற 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங் தீர்த்துக்கட்டப்பட்டு விட்டதாக போலீசார் முதலில் கூறி இருந்தனர். ஆனால் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ஆற்காடு சுரேசின் கொலை சம்பவம் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் இல்லை என்பதும் பல்வேறு காரணங்கள் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வடசென்னையை சேர்ந்த பிரபல தாதா, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டு சிறையில் இருந்து சதி திட்டம் தீட்டி கொடுத்திருப்பதும், அதற்கு பின்னணியில் வெளியில் இருந்து குட்டி, குட்டி தாதாக்கள் பலரும் உதவி செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


    இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த மலர்க்கொடி, த.மா.கா.வை சேர்ந்த அரிகரன் ஆகியோரும் இந்த வழக்கில் கூடுதலாக கைது செய்யப் பட்டனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திரைமறைவில் இருந்து இவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்திருப்பதும் அம்பலமாகி உள்ளது. மயிலாப்பூரில் கொலை செய்யப்பட்ட தோட்டம் சேகரின் மனைவியான மலர்க்கொடி தனது கணவர் கொலை செய்யப்படுவதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்று கருதி செயல்பட்டு வந்துள்ளார்.

    இதன் தொடர்ச்சியாகவே, கொலை சம்பவத்துக்கு அவர் ரூ.50 லட்சம் பணத்தை வாரி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல பெண் தாதாவான அஞ்சலையும் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதை தொடர்ந்து அஞ்சலையை கைது செய்ய போலீசார் தேடினார்கள். இதனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார்.

    புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது. கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது புகார்கள் உள்ள நிலையில் பி.வகை ரவுடிகள் பட்டியலில் அஞ்சலை இடம் பெற்றிருக்கிறார்.

    போலீஸ் தேடுவதை அறிந்ததும் அஞ்சலை தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். சென்னையில் அவர் எங்காவது பதுங்கி இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் பல இடங்களில் போலீசார் தேடினார்கள். ஆனால் அஞ்சலை எங்கும் இல்லை.


    சென்னையை விட்டு அவர் தப்பி ஓடி விட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அஞ்சலைக்கு ஆந்திராவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் அங்கு சென்று யாருடைய வீட்டிலாவது பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பாஜக பிரமுகரான அவர் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி அதன் மூலமாக முக்கிய பிரமுகர்கள் யாருடைய வீட்டிலாவது தஞ்சம் புகுந்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து அஞ்சலையை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னையில் உள்ள அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அஞ்சலையின் மருமகன் ஒருவரிடம் விசாரணை நடத்திய போலீசார் எப்போது அழைத்தாலும் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

    இவரை போல அஞ்சலையின் உறவினர்கள் பலரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதற்கிடையே ஆற்காடு சுரேசின் வலது கரமாக செயல்பட்ட தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட உடன், 'ஆம்ஸ்ட்ராங்கை கொல்லாமல் விட மாட்டேன்' என்று அந்த ரவுடி சபதம் எடுத்துள்ளான். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அந்த ரவுடியும் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அந்த ரவுடிகளையும் அவனது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இவர்களை போன்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய மேலும் பல ரவுடிகளுக்கும் போலீசார் வலை விரித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிக் கும்பலை சேர்ந்த ரவுடிகள் பலரும் ஆந்திராவுக்கு தப்பி ஓடி சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இப்படி ஆம்ஸ்ட்ராங் கொலையில் தோண்ட தோண்ட பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பதால் போலீஸ் விசாரணையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    கொலை பின்னணியின் முழு நெட்வொர்க்கையும் போலீசார் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இதில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆம்ஸ்ட்ராங்கை பெரம்பூரில் அவரது இடத்தில் வைத்தே கொலையாளிகள் திட்டம் போட்டு தீர்த்து கட்டி இருப்பது அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது அவரது உடலை பார்த்து கதறி அழுத பலர் "கூடவே இருந்தும் உங்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே அண்ணா, யாரையும் சும்மா விட மாட்டோம்" என்று கூறி கதறி அழுதனர்.

    இதைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பலர் 'பழிக்குப்பழி நிச்சயம்'என சமூக வலை தளங்களிலும் கருத்துக்களை பதிவிட்டனர். "16-வது நாளில் நிச்சயம் பழி தீர்ப்போம்" என்றும் சிலர் சபதம் எடுத்து செயல்பட்டு வருவதாகவும் போலீசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு நாளை 16-வது நாளாகும். எனவே பழிக்குப்பழியாக சென்னையில் மேலும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறிவிடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் உள்ளனர்.

    வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலேயே ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். நாளை 16-ம் நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதால் சென்னை, திருவள்ளூரில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ரவுடிகள் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×