என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி திண்டுக்கல் சிறையில் அடைப்பு
- இரவு 11 மணியளவில் திண்டுக்கல் கிளைச் சிறைச்சாலையில் அங்கிட் திவாரி அடைக்கப்பட்டார்
- கைதான அங்கிட் திவாரி மத்திய பிரதேசமாநிலம் போபாலை சேர்ந்தவர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியில் இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு முடிவடைந்த நிலையில் அதே வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி(32) என்பவர் டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டார். சுரேஷ்பாபுவின் சொத்து குவிப்பு வழக்கை தாங்கள் கையில் எடுக்க இருப்பதாகவும், இதனை கைவிடவேண்டும் எனில் ரூ.5 கோடி லஞ்சமாக தரவேண்டும் என கேட்டுள்ளார்.
அவர் சற்று தயங்கவே ரூ.3 கோடி தருமாறு கேட்டுள்ளார். அதற்கும் டாக்டர் சுரேஷ்பாபு சம்மதிக்கவில்லை. இதனையடுத்து ரூ.50 லட்சம் பேசி முதல் தவணையாக ரூ.20 லட்சம் கொடுத்துவிட்டு 2-ம் தவணையாக ரூ.31 லட்சம் கொடுக்க முயன்றபோது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும், களவுமாக பிடிபட்டார்.
நேற்று காலை அங்கிட் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துவந்து இரவு வரை விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு இரவு 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மோகனா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இரவு 11 மணியளவில் திண்டுக்கல் கிளைச் சிறைச்சாலையில் அங்கிட் திவாரி அடைக்கப்பட்டார். ஆனால் அவர் மிகுந்த சோகத்துடன் அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் யாருடனும் பேசாமல் இருந்தார். நள்ளிரவு சமயத்தில் அவர் கதறி அழுததால் சிறைக்காவலர்கள் அவருக்கு வேறு எதுவும் உதவி வேண்டுமா? என கேட்டனர். ஆனால் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. விடிய விடிய தூங்காமல் தனது அறையிலேயே அழுதபடி இருந்தார்.
அதிகாரிகள் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைதான அங்கிட் திவாரி மத்திய பிரதேசமாநிலம் போபாலை சேர்ந்தவர். ஆர்.கே.திவாரியின் மகனான அவர் அமலாக்கத்துறையில் கடந்த 2018-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார். வடமாநிலங்களில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த ஏப்ரல் மாதம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 29-ந்தேதி திண்டுக்கல் அரசு டாக்டரான சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.
டாக்டர் மதுரைக்கு சென்றபோது அவரது காரில் ஏறிக்கொண்ட அங்கிட் திவாரி நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என கேட்டுள்ளார். அதன்பின்னர் ரூ.50 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசினார். இதைத்தொடர்ந்து முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை நத்தத்தில் வைத்து வாங்கி கொண்டார். பேசியபடி மீதி பணத்தையும் தரவேண்டும் எனவும், தனது மேல் அதிகாரிகளுக்கு பங்கு தரவேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ் மூலம் மிரட்டினார்.
தனக்கு வந்த மிரட்டல் குறித்து டாக்டர் சுரேஷ்பாபு நவம்பர் 30-ந்தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரை கொடைரோடு சுங்கச்சாவடி அருகே சுற்றிவளைத்து கைது செய்தனர். பணத்தை அங்கிட்திவாரி வாங்கும்போது தான் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக கையால் வாங்காமல் கார் டிக்கியில் வைத்து செல்லுமாறு கூறுவது வழக்கம். அதன்படிதான் டாக்டர் சுரேஷ்பாபுவிடமும் பணத்தை கையில் வாங்காமல் கார் டிக்கியில் வைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இவர் பல்வேறு இடங்களில் சோதனைக்கு செல்லும்போது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் கத்தை கத்தையாக பணம், நகைகளை பார்த்து நாமும் இதேபோல் ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைத்துள்ளார். அதேபோல் குற்றவழக்கில் இருந்து தப்பிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களது செல்போனுக்கு சில மாதங்கள் கழித்து போன் செய்து அவர்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்துள்ளார். தான் வாங்கிய பணத்தில் உயர் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுத்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்களில் சோதனை முடிவுக்கு பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்