search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அவினாசி கோவில் கும்பாபிஷேகம்: 80 குண்டங்களுடன் யாகசாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்
    X

    அவினாசி கோவில் கும்பாபிஷேகம்: 80 குண்டங்களுடன் யாகசாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

    • கோவில் வளாகத்தில் திருமாளிகை பத்தி அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
    • திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அவிநாசி:

    கொங்கு மண்டலத்தில் தேவார பாடல் பெற்ற ஏழு சிவாலயங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீஅவிநாசி லிங்கேஸ்வரர் கோவில். கொங்கு சோழர்கள் கட்டிய இக்கோவிலில் பாண்டியர், ஹொய்சாளர், விஜயநகரம் மற்றும் மைசூர் மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2008 ஜூலை 14-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போதைய அறங்காவலர் குழு பொறுப்பேற்றதும் திருப்பணி செய்து கும்பாபிஷேக விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் திருமாளிகை பத்தி அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    கும்பாபிஷேக விழா பிப்ரவரி 2-ந்தேதி நடக்க உள்ள நிலையில், மயிலாடு துறையை சேர்ந்த குழுவினர், யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். கோவில் அன்னதான மண்டபம் அருகே 3 பகுதிகளாக 80 குண்டங்களுடன் யாகசாலைகள் அமைக்கப்படுகின்றன.

    அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் மற்றும் சுப்பிரமணியருக்கு நவாக்னி வேள்விசாலை அமைக்கப்படுகின்றன. விநாயகர், பாதிரியம்மன், கால பைரவருக்கு பஞ்சாக்னி யாகசாலையும் அமைக்கப்படுகிறது.

    விநாயகருக்கு பத்மவேதிகை, சிவபெருமானுக்கு, பஞ்சாசன வேதிகை, அம்மனுக்கு ஸ்ரீசக்ர வேதிகை, முருகப்பெருமானுக்கு சற்கோண வேதி கைகள் அமைக்கப்படுகின்றன. 150க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், யாகசாலை பூஜைகளை நிகழ்த்த உள்ளதாக சிவாச்சாரியர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறியதாவது:-

    கோவில் 2ம் பிரகாரத்தில் திருமாளிகை பத்தி மண்டபம், கருங்கல்தளம் அமைப்பது, கதவுகள் புதுப்பிப்பு பணி, கோபுரம் மற்றும் விமானம் பெயின்டிங் பணி முடிந்துள்ளது. தெப்பக்குளம், படிக்கட்டு களும் சீரமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக, மயிலாடுதுறையை சேர்ந்த குழுவினர் 80 குண்டங்களுடன் கூடிய யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். விரைவில் யாகசாலையை சுற்றிலும் முளைப்பாலிகை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×