search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் டிரோன்கள் பறக்க தடை- மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை
    X

    மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் டிரோன்கள் பறக்க தடை- மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை

    • வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

    சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×