search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பறவைக்காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழி-முட்டை கொண்டு வர தடை
    X

    பறவைக்காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழி-முட்டை கொண்டு வர தடை

    • வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    ஊட்டி:

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தின் எல்லை மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்ட எல்லையிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள பிறப்பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிர கண்காணிப்பு செய்ய கக்கனல்லா, நம்பியார் குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்ட வயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடியில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளைத் தாக்கும், மனிதரையும் தாக்கவல்லது. நோய்தாக்கிய வெளிநாடுகளில் இருந்து வரும் வனப்பறவைகள் மூலம் இந்நோய் நமது மாவட்டத்திலும் நுழைய வாய்ப்பு உள்ளது.

    பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பண்ணையாளர்கள் தவறாது கடை பிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி, முதலிய பல்வேறு இனப்பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக்கூ டாது. இதரப் பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, அனைத்து உள் உறுப்புகள் மற்றும் கால்களின் மீது இரத்துக்கசிவு காணப்படும். பறவைக்காய்ச்சல் நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற மற்றும் இறந்த கோழிகளை கையாளுவோருக்கு இந்நோய் சுவாசக் காற்று மூலம் பரவக் கூடும். காய்ச்சல், தொண்டைப்புண், இருமல் ஆகியவை மனிதரில் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

    நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டை உண்பதால் இந்நோய் பரவாது. பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.

    மேலும், தற்காலிகமாக கேரளா மாநில பிற பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றிவருவது மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×