search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    37 மாவட்டங்களில் இன்று காலை உணவு திட்டம் தொடக்கம்
    X

    கோவையில் உள்ள பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

    37 மாவட்டங்களில் இன்று காலை உணவு திட்டம் தொடக்கம்

    • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மீதமுள்ள 37 மாவட்டங்களில் இன்று தொடங்கியது.
    • மாணவர்களுக்கு இன்று கிச்சடி வகை உணவுகள் பரிமாறப்பட்டன.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார்.

    மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டிவிட்டும் மகிழ்ந்தார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மீதமுள்ள 37 மாவட்டங்களில் இன்று தொடங்கியது.

    இந்த 37 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டரால் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது.

    சென்னையை பொருத்தவரை வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னையில் 37 மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    திருச்சி துறையூர் நடுவலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். கோவையில் உள்ள பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

    இதேபோல் 37 மாவட்டங்களிலும் இன்று காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு இன்று கிச்சடி வகை உணவுகள் பரிமாறப்பட்டன. கூடுதலாக கேசரியும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×