search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் நலன்களை விட்டுக்கொடுக்கலாமா முதல்வரே!- பாஜக
    X

    உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் நலன்களை விட்டுக்கொடுக்கலாமா முதல்வரே!- பாஜக

    • தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது

    தமிழக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 2024-ல், தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை, அவ்வளவு ஏன்? தமிழ்நாடு என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை என்ற தனது கம்பிக் கட்டும் கதையை உண்மையாக்கும் நோக்கில், பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    நாட்டின் சுமூகமான நிர்வாகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் கூட்டுறவும் மிக அவசியம். இரு தரப்பினரின் கூட்டுறவையும் மாநிலங்களின் சமூக பொருளாதரத்தையும் மேம்படுத்தும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மு.க ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல.

    தங்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் பிரதிநிதியாக அக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழக மக்களின் தேவைகளை எடுத்துரைக்க மறுப்பதன் மூலம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.

    காரணம், நிதி ஆயோக் மூலம் தமிழகம் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது. உதாரணமாக,

    * தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தளமாக செயல்படும், அடல் (ATAL) சமூக கண்டுபிடிப்பு மையம் தமிழகத்தில் துவங்கப்பட்டது.

    * 2021-ல் நிதி ஆயோக் நகர்ப்புற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கான மாநாட்டை நடத்தியது.

    * தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், நிதி ஆயோக்குடன் இணைக்கப்பட்ட வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (DMEO) ஆகியவற்றுடனான அறிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

    இவ்வாறு தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×