search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது - சென்னை ஐகோர்ட்
    X

    செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது - சென்னை ஐகோர்ட்

    • பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது
    • வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும்

    பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் தன்னுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "தான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். தன்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023 ம் ஆண்டு முத்துச்சரவணை காவல்துறை என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு தான்தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால், தனக்கு கொலை மிரட்டல் வருவதால், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில், வெங்கடேஷ் செம்மரக்கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு முடியாது" என அரசு தரப்பில் இருந்து வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார்.

    இதனையடுத்து பேசிய நீதிபதி, பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது. ஆகவே பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.

    வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். குற்றச் செயலில் ஈடுபடும் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்க வைக்கும் என்று கூறி பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷின் மனுவை அவர் தள்ளுபடி செய்தார்.

    Next Story
    ×