என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்து: திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற தாய்-மகன் பலி
    X

    தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்து: திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற தாய்-மகன் பலி

    • கார் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது.
    • வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான தாய்-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களது மகன் மவுலி (25). இவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக வாடகை காரில் புறப்பட்டு சென்றனர். அந்த காரை குணசேகரன் (27) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் இன்று காலை 6 மணி அளவில் விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள அக்ரஹாரப்பட்டியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி, அவரது மகன் மவுலி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் கண்ணன், கார் டிரைவர் குணசேகரன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அவர்களை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான தாய்-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற தாய்-மகன் பலியான சம்பவம் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×