search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Madras HC
    X

    அரசு பள்ளிகளில் சாதி பெயரை நீக்க வேண்டும்- ஐகோர்ட் கருத்து

    • கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தமிழ்மணியின் நேர்காணலை அடிப்படையாக வைத்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என அரசு தரப்பில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இதை படித்து பார்த்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என கூறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பொத்தாம் பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்

    மேலும், 'மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன அவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும். தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கியது போல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுங்கள்' என கருத்து தெரிவித்தனர்.

    பின்னர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கல்வராயன் மலைப்பகுதிக்கு மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த குழுவுடன் ஐகோர்ட்டுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் தமிழ்மணியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அப்போது, வக்கீல் மோகன்தாஸ் ஆஜராகி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    அப்போது அவர், 'பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 9 கோடி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஆனால் அந்த தொகை இன்னமும் முழுமையாக செலவிடப்படவில்லை' என்று கூறி அதுதொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தார். அதற்கு நீதிபதிகள், 'தங்களது கோரிக்கையை ஏற்கிறோம். அரசு குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாம்' என்றனர்.

    Next Story
    ×