search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-  ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தல்
    X

    அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தல்

    • ஒளி மயமான தேசத்தை உருவாக்கும் உன்னத லட்சியம் கொண்டது.
    • ஒற்றுமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேசத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்குவது இந்திய அரசமைப்பு சட்டமாகும். பாராளுமன்ற ஜனநாயகம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளில் சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் தத்துவங்களை நடைமுறைப்படுத்தி ஒளி மயமான தேசத்தை உருவாக்கும் உன்னத லட்சியம் கொண்டது.

    யூனிட்டரி சார்பு கொண்ட கூட்டாட்சி அமைப்பு, ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை, மதசார்பின்மை, நெகிழும் மற்றும் நெகிழாதன்மை, ஒற்றைக் குடியுரிமை, வயது வந்தோர் வாக்குரிமை உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டது இந்திய அரசமைப்பு சட்டம்.

    இந்த சட்டத்தால் நமது நாட்டில் பல்வேறு இன, மொழி, சாதி, மத வேறுபாடுகள் இருப்பினும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    உலகின் மிகசிறந்த அரசமைப்பு சட்டம் என சிறந்த சட்ட விற்பனர்களால் கொண்டாடப்படும் இச்சட்டத்தை இந்தியமக்கள் தெரிந்து கொண்டு போற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 2015 - ம் ஆண்டு ஒன்றிய அரசு, நவம்பர் 26 - ம் நாளை ஆண்டுதோறும் அரசமைப்பு சட்ட நாள் அல்லது "சம்வி தான் திவாஸ் "என கொண்டாட வேண்டும் என அரசிதழில் அரசாணை வெளியிட்டது. அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் அரசமைப்பு சட்டம் பற்றி சொற்பொழிவுகள், விவாதங்கள், கட்டுரை வாசிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி இந்திய அரசமைப்பு சட்டத்தின் மதிப்பினையும் சிறப்பினையும் எடுத்து சொல்ல வேண்டும் என ஆண்டு தோறும் சுற்றறிக்கை அனுப்பி வருகிறது. ஆனால், இந்த அரசாணை மற்றும் சுற்றறிக்கைகள் நாடு முழுக்க தொடர்ந்து பெரும்பான்மையான அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதை நிர்பந்தித்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய, மாநில அரசுகள் இதனை கண்டு கொள்வதில்லை. இந்த மெத்தனப்போக்கு கண்டிக்கத்தக்கது. இந்திய நாட்டின் அனைத்து குடிமக்க ளுக்கும் அரசமைப்பு சட்டம் குறித்த ஆழ்ந்த அறிவு அவசியம். தங்களுக்குள்ள உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு பெற்று பொறுப்புள்ள குடி மக்களாக ஜனநாயகத்தில் பங்கெடுக்கவும் அது இன்றியமையாததாகும். எனவே இனிவரும் காலங்களிலாவது ஒன்றிய, மாநில அரசுகள், அரசமைப்பு நாளன்று அரசமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வுகள் நடைபெறுவதை கண்காணித்து உறுதி செய்வதோடு சட்ட அறிவு மிக்க சமூகத்தை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×