search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை பக்தர் மரணம்- ஒரு மாதத்தில் மட்டும் 6 பேர் உயிரிழப்பு
    X

    வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை பக்தர் மரணம்- ஒரு மாதத்தில் மட்டும் 6 பேர் உயிரிழப்பு

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
    • மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்குள்ள 7 மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் சுயம்புலிங்கத்தை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.

    இங்கு மலையேறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மலையேற சிரமமாக இருக்கும் என்பதால் மலையேறுபவர்கள் கையில் கம்பை ஊன்றியபடியே செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    இவ்வாறு வெள்ளியங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாதத்தில் மட்டும் 5 பக்தர்கள் பலியானார்கள். ஏற்கனவே அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்து மலையேறும் போது உடல்நிலை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மலையேற அனுமதித்து வருகிறார்கள். இதயநோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மரணம் அடைந்தார். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரகுராம் (வயது 50). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.

    இவரும், அவரது பகுதியில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து ஒரு வேன் மூலம் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவை மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராமின் உடல் பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே 5 பேர் இறந்தநிலையில் நேற்று ரகுராமும் மரணம் அடைந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×