search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    12 ஆண்டுகளாக பயணிகள் எதிர்பார்க்கின்றனர்: செங்கோட்டை-தாம்பரம் இடையே தினசரி ரெயில் இயக்கப்படுமா?
    X

    12 ஆண்டுகளாக பயணிகள் எதிர்பார்க்கின்றனர்: செங்கோட்டை-தாம்பரம் இடையே தினசரி ரெயில் இயக்கப்படுமா?

    • ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.
    • பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கும் ரெயில் வசதி கிடையாது.

    தென்காசி:

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்திலும், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. தென்காசி ரெயில் நிலையம் ரூ.21.60 கோடி வருமானத்துடன் 9-வது இடத்தில் உள்ளது.

    இதில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ், ஈரோடு எக்ஸ்பிரஸ், நெல்லை-செங்கோட்டை 4 ஜோடி பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் ஆகியவற்றால் தென்காசி ரெயில் நிலையத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மதுரை கோட்டத்தில் மொத்தம் 132 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமை கொண்ட நெல்லை-தென்காசி வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை செங்கோட்டையில் இருந்து அம்பை, கல்லிடைக்குறிச்சி, நெல்லை சந்திப்பு வழியாக சென்னைக்கு தினசரி ரெயில் இல்லை. மேலும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கும் ரெயில் வசதி கிடையாது.

    எனினும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் மதுரை கோட்டத்தின் வருமானத்தில் முதல் 50 இடத்திற்குள் வந்துள்ள நிலையில் இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை வலுத்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை-தென்காசி வழித்தடத்தின் பிரதான கோரிக்கையான சென்னைக்கு தினசரி ரெயிலை மத்தியில் புதிய அரசு அமைந்ததும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது செங்கோட்டை-தாம்பரம் இடையே வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே ரெயில் இயக்கப்படுகிறது. அதனை தினமும் இயக்க வேண்டும். மேலும் மும்பை, பெங்களூரு, மங்களூரு ஆகிய ஊர்களுக்கு தென்காசி வழியாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் அதிகரித்து வருவதால் திருவனந்தபுரம் செல்வதற்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×