search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    எழும்பூர் - கடற்கரை 4-வது ரெயில் பாதை பணி: ஆகஸ்டில் நிறைவடையும்
    X

    எழும்பூர் - கடற்கரை 4-வது ரெயில் பாதை பணி: ஆகஸ்டில் நிறைவடையும்

    • ஒரு பாதையில் வட மாநில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • கூவம் ஆற்றின் கரையோரத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் உள்ள தாம்பரம்-கடற்கரை ரெயில்வே வழித்தடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரெயில்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை 3 ரெயில்வே பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரெயில்களும், ஒரு பாதையில் வட மாநில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 4.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4-வது புதிய ரெயில் பாதை அமைக்க தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்தது. இந்த ரெயில் பாதையை ரூ.279 கோடி செலவில் அமைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் எழும்பூரில் இருந்து கடற்கரை வரையிலான 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

    இதேபோன்று வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை ஏழு சிறிய பாலங்கள் மற்றும் ஒரு பெரிய பாலத்தின் பணிகள் முடிவடைந்து, கூவம் ஆற்றின் கரையோரத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    ரெயில் பாதையில் சிக்னல், தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவவும், இவற்றுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கும் 12 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கி விரைவுபடுத்தப்படும் எனவும், வரும் ஆகஸ்ட் மாதம் இந்த பணிகள் நிறைவு பெறும் எனவும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×