search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 3-வது ஆலை அமைக்கும் பணி தொடக்கம்
    X

    கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 3-வது ஆலை அமைக்கும் பணி தொடக்கம்

    • சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும்.
    • 3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலை கடந்த 2013-ம் ஆண்டு 1 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது. இங்கிருந்து திருவான்மியூர், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் பிரச்சினை குறைந்தது.

    இதைத்தொடர்ந்து சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் சூலேரிக்காட்டில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை கட்ட முடிவு செய்யப்பட்டது.

    ரூ.1,260கோடி செலவில், 15 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வைகயில் 2-வது புதிய ஆலை கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    தற்போது 2-வது ஆலை கட்டுமான பணிகள் 85 சதவீதம் முடிந்து உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில் வரும் ஆண்டுகளில் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஜப்பான் நாட்டு பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் இணைந்து சூலேரிக்காடு கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நவீன 3-வது ஆலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அப்பகுதியில் தற்காலிக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    மேலும் நவீன கருவிகளுடன் கடல் நீர்நிலை ஆய்வு, மணல் தன்மை, குழாய்கள் பதிக்கும் பகுதி, மீன்வள பாதுகாப்பு, இயற்கை சூழல், மாசுபாடு, வனவளம் உள்ளிட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த ஆலையில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2-வது மற்றும் 3-வது ஆலை முழுபயன்பாட்டுக்கு வரும்போது சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சூலேரிக்காட்டில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை அமைக்கும்பணி முடியும் நிலையில் உள்ளது. சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது.

    எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும். இங்கு தற்போது 3-வது ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணி முடிய குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

    3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. 2-வது, 3-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும்போது சென்னையின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×