search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆழியாறு அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்வு
    X

    ஆழியாறு அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்வு

    • கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
    • சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை வாயிலாக கோவை மாவட்டத்தில் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டுகளில் 50,350 ஏக்கர் நிலங்களும், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேல்ஆழியாறு, நவமலை, காடம்பாறை மற்றும் சர்க்கார்பதி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்துள்ள பிரதான நவமலை ஆறு, கவியருவி மற்றும் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையில் கடந்த 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 88.60 அடியாக இருந்தது. மூன்று நாட்களில் 12.50 அடி அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 101.10 அடியாக உயர்ந்தது.

    நேற்று தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் இன்று காலை 7 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3,709 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல சோலையார் அணையும் நிரம்பி உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் உள்ள 10 தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக கருதப்படுவது சோலையார் அணையாகும். சாலக்குடி ஆற்றின் கிளை ஆறான சோலையார் ஆற்றின் குறுக்கே 3290 அடி உயரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சோலையார் அணை, 5392 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கும் கொள்ளளவு கொண்டது. சோலையார் அணை தான் தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் மிக உயரமான அணையாகும்.

    சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 161 அடியாக உள்ளது. மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும்பட்சத்தில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும்.

    Next Story
    ×