search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பதக்கம் வாங்க நிதியில்லையா..? சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை: துணைவேந்தர் கவுரி விளக்கம்

    • மாணவர்கள், விழா நடைபெற்ற இடத்தில் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.
    • யாருக்காவது விடுபட்டிருப்பின் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டால் பதக்கம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முதன்மை முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும், தர வரிசையில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 100 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இன்றைய விழாவில் மொத்தம் 762 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 565 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    இன்றைய விழாவின்போது, பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு பதக்கங்கள் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. இதுபற்றி கேட்டபோது போதிய நிதி இல்லை என்பதால் பதக்கம் வழங்கப்படவில்லை என நிர்வாகம் சார்பில் தெரிவித்ததால் மாணவர்கள், விழா நடைபெற்ற இடத்தல் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் இந்த தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி மறுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    தங்கப்பதக்கம் வழங்க நிதி பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல் தவறானது. தகுதியான நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாருக்காவது விடுபட்டிருப்பின் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டால் பதக்கம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    விழா ஏற்பாடுகளில் சில சில குளறுபடிகள் இருந்திருக்கலாம். சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்த வேண்டிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிய அரங்கத்தில் நடத்தப்பட்டதால் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களால் பட்டம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. நிகழ்வில் எந்தவித குளறுபடிகளும் நடைபெறவில்லை. குடியரசு தலைவர் வருகையால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    தொலைதூர கல்வி நிலைய முறைகேடு புகார் என்பது பழைய புகார்; அது விசாரணையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×