என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்கள்: 3 மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகள் தவிப்பு
- நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
- இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வரையிலும் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது.
தென் மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை விடாமல் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது.
குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு இடங்களில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் நகரப்பகுதிகள் மற்றும் கிராமங்கள் என 2 மாவட்டங்களிலும் திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் வெள்ளநீர் விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும்.
இந்த மாவட்டத்தில் ஜூன் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் சாகுபடி மற்றும் நவம்பர்-பிப்ரவரி வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான சாகுபடியும் செய்யப்படுகிறது.
இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிரதான பயிராக நெல்லும், அடுத்தபடியாக பயிறு வகைகளும் சாகுபடி செய்யப்படுகிறது.
தாமிரபரணி ஆற்று பாசனம் மூலம் மானூர், பாளை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த சாகுபடி பரப்பில் நன்செய் நெல் சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.
மானாவாரி பகுதிகளில் நீர் ஆதாரம் இருக்கும் பகுதிகளிலும் கூட நெற்பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், பயறு, நிலக்கடலை, எள், தென்னை, வாழை, மிளகாய் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆண்டுதோறும் கார் பருவ சாகுபடியானது சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடைபெறும்.
தொடர்ந்து முக்கியமான பருவ சாகுபடியாக கருதப்படும் பிசான பருவ சாகுபடி காலகட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் நடைபெறும்.
இவ்வாறாக தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இவை தவிர தாமிரபரணி ஆற்று நீர் பாசனம் அல்லாமல் மற்ற பாசனங்கள் வழியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையம், ராதாபுரம், திசையன்விளை என மற்ற பகுதிகளில் அணைகளின் நீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வரையிலும் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் 2 நாட்களாக பெய்த பெரும் மழை காரணமாக அணைகளில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது.
இது தவிர ஏராளமான குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டு வயலுக்குள் புகுந்ததால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் நாசமாகி வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திடியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயி கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை காரணமாக குளங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் கடன் வாங்கி ஏராளமானவர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது பெய்த பெருமழையால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகிவிட்டது.
பொதுவாக நெல் நடவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு உழவு செய்து மரம் அடிக்க ரூ.6 ஆயிரம் வரை டிராக்டருக்கு செலவாகிறது.
அதன்பின்னர் வரப்பு வெட்டுவதற்கு ரூ.1,800-ம், நாற்று நடுவதற்கு வேலையாட்களுக்கு கூலியாக ஏக்கருக்கு ரூ.3,600 வரையிலும் செலவாகிறது. முன்னதாக நெல் விதை வாங்கி நாற்று வளர வைக்க ரூ.1,800 செலவாகிறது.
அதன்பின்னர் நெல் நாற்று நடும்போதே அதற்கு அடி உரமாக ரூ.1,350 மதிப்பிலான டி.ஏ.பி. உரம், 266 ரூபாய்க்கு யூரியா உள்ளிட்டவையும் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் களை பறிக்க ரூ.3 ஆயிரம் வரை கூலியாக கொடுக்க வேண்டியுள்ளது.
இதேபோல் 3 முறைகளை பறித்தல், மருந்து அடித்தல், உரம் போடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் கடந்து நெல் விளைந்தவுடன் எந்திரம் மூலம் அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஏக்கரை அறுவடை செய்ய 1 1/2 மணி நேரம் வரை ஆகிறது. இதற்கு கூலியாக ரூ.3,600 செலவு செய்ய வேண்டியுள்ளது.
தற்போது நாங்கள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நாற்று நட்ட நிலையில், மழையால் அவை மூழ்கி நாசமாகி விட்டது. இந்த நிலங்களில் மீண்டும் உழவு செய்து நாற்று நட்டாலும், அவை நல்ல மகசூல் தராது. காலம் கடந்து விட்டதால் இனி விதை நெல் வாங்கி நாற்று பாவ முடியாது. மார்கழி மாத பயிறு மண்ணுக்கு ஆகாது என்பார்கள். எனவே இனி நாங்கள் நாற்று வாங்கி நடும்போது புகையான் உள்ளிட்ட நோய் தாக்குதல் தான் ஏற்படும்.
எனவே அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் பெய்த மிக கனமழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
வாழை, நெல் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. குளம், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விளைநிலங்களில் இன்னும் 1 ஆண்டுக்கு விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாது. எனவே ஒரு விவசாயி குடும்பத்துக்கு மாதம் தோறும் ரூ 10 ஆயிரம் என 1 ஆண்டுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்