search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை:  கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து முதியவர் பலி
    X

    வேருடன் விழுந்து கிடக்கும் மரத்தையும், கால்நடை மருத்துவமனை ரோட்டில் சுவர் இடிந்து இருப்பதையும் படத்தில் காணலாம். 

    சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை: கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து முதியவர் பலி

    • மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5.30 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோன்று மரங்களும் வேரோடு சாய்ந்தன. விளம்பர தட்டிகள், பேனர்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது.

    ஈரோடு புதுமை காலனியில் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த காளியம்மன் கோவில் கோபுரத்தில் விழுந்தது. இதில் கோபுரம் சேதம் அடைந்தது. மரக்கிளைகள் அங்கிருந்த டீ கடை மீது விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேப்போல் ஈரோடு ஐஸ்வர்யா ஓட்டல் அருகே இருந்த மரம், பெரியண்ணா வீதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மூலப்பட்டறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரியார் நகர் மற்றும் ஏ.பி.சி, மருத்துவமனை பகுதியில் தலா ஒரு மரம் விழுந்தது. ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சிறிய மரம் ஒன்று விழுந்தது. பழைய மோப்பநாய் பிரிவு பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதேபோல் அந்த பகுதியில் உள்ள பல்வேறு மரக்கிளைகள் முடிந்து விழுந்தன. ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மணிக்கூண்டு எல்லை மாரியம்மன் கோவில் அருகே இருந்த பழமையான மரம் கீழே விழுந்தது. ஈரோடு அண்ணாமலை லேஅவுட் பகுதியில் வேருடன் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோட்டில் சுவர் இடிந்து விழுந்தது. ஈரோடு கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. நேற்று மழை பெய்த கனமழையால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரே நாளில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரோட்டில் விழுந்து கிடக்கும் மரம் மரக்கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பஸ்சில் ஏறி தீயணைப்பு நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

    அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு இருந்த சாக்கடை கால்வாய் முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 45 நிமிடம் பெய்த மழையால் ஈரோடு மாநகரம் ஸ்தம்பித்தது.

    இதேப்போல் கவுந்தப் பாடி, மொடக்குறிச்சி, கோபி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-40, கவுந்தப்பாடி-26.80, மொடக்குறிச்சி-9, கோபி-4.20, சென்னிமலை, அம்மாபேட்டை-3 பெருந்துறை-2.

    Next Story
    ×