search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில்  கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
    X

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

    • அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பிணவறை முன்பும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • 10 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டது.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை 100-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். அதில் பலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டது.

    இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோரை உறவினர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களில் 47 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டனர்.

    இதில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி மாதவசேரியை சேர்ந்த நாராயணசாமி (65), வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த ராமு (50), கருணாபுரத்தை சேர்ந்த சுப்ரமணி (60) ஆகியோர் இறந்தனர். நேற்று கோட்டமேட்டை சேர்ந்த ஆனந்தன் (50), துர்க்கம் ரோடு பகுதியை சேர்ந்த ரவி (60), கருணாபுரம் விஜயன் ( 59), பி. ராஜேந்திரன் (55), சேஷ சமுத்திரத்தை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், மற்றொரு ஆனந்தன் (55), கோட்ட மேட்டை சேர்ந்த மனோஜ்குமார் (33), கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (65), கருணாபுரத்தை சேர்ந்த நாகபிள்ளை (39) ஆகிய 9 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    மேலும் இன்று அதிகாலை கோட்டைமேடு பாலு (50), மற்றொரு ராஜேந்திரன் (60), மாதவன் சேரியை சேர்ந்த வீரமுத்து (33) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் சாவு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    இதில் 10 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டது. அவர்களது உடல்கள் சொந்த ஊரில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. மற்றவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவு முன்பும், பிணவறை முன்பும் உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.

    மேலும் கண்ணபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), கள்ளக்குறிச்சி கோட்டை மேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), பார்த்திபன் (27), கருணாபுரம் மதன் (46), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணிவண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிகண்டன் (60), கார்த்திக்கேயன் (36) உள்பட 32 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 47 பேரில் 15 பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 32 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பிணவறை முன்பும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×