search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    யார் இந்த சங்கரய்யா?
    X

    யார் இந்த சங்கரய்யா?

    • சமூக மாற்றத்துக்காக தொடர்ந்து போராடியவர் 'தகைசால் தமிழர்' சங்கரய்யா.
    • இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சங்கரய்யா.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது வரலாறு பின்வருமாறு:

    சுதந்திரப் போராட்ட தியாகியும், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று 3 தடவை தமிழக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.

    இடதுசாரி இயக்கத்தில் என்.எஸ். என்று அன்போடு அழைக்கப்பட்ட கோவில்பட்டி நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியினருக்கு 1921-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி மகனாகப் பிறந்தவர் சங்கரய்யா.

    மாணவர் பருவத்திலேயே கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். போலீசாரின் தடியடிகளையும் எதிர்கொண்டார். தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டார்.

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசை அழைத்து சுதந்திரப் போராட்டத்துக்காக கூட்டத்தை நடத்திய சிறப்பு அவருக்கு உண்டு. 1938-ம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராட்ட பயணத்தை தொடங்கினார்.

    அதன்பின் 1939-ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலித்தார். இதற்காக அவர் முன்னெடுத்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் 1941-ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்துக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    தொடர்ந்து 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியும், மொழிவாரி மாநிலமாக பிரித்தபோது தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.

    கம்யூனிஸ்டு கட்சியில் 1943-ல் மதுரை மாவட்ட கம்யூனிஸ்டு செயலாளராக பொறுப்பேற்று, பின்னர் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1964-ல் உருவானபோது இருந்த 36 முக்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 1995- 2002-ம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்தார்.

    தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தார். தொழிலாளர்களின் எண்ணற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார்.

    கொள்கை பிடிப்புடன் சாதி மறுப்பு திருமணம் பற்றி மேடையில் மட்டும் பேசாமல் தன்னுடைய குடும்பத்திலேயும் அதை நிறைவேற்றி காட்டினார்.

    1997-ல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு, 1998-ல் மத நல்லிணக்க பேரணியை கோவையில் நடத்தினார்.

    தன்னுடைய வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறையில் கழித்து இருக்கிறார். சிறை வாழ்க்கையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோருடன் நட்பு கொண்டார்.

    அதேபோல சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி மற்றும் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் நெருக்கம் கொண்டவர்.

    இவருக்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவப்படுத்தி இருந்தது. இந்த விருதை தமிழக அரசு அறிமுகப்படுத்தியபோது முதன்முதலாக அந்த விருதை 2021-ல் சங்கரய்யா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×