search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மனைவி இறந்த சோகத்தில் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி டாக்டர் தற்கொலை
    X

    மனைவி இறந்த சோகத்தில் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி டாக்டர் தற்கொலை

    • கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது.
    • போலீசார் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை வாரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியவன் (33). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

    சேலம் அம்மாபேட்டை கடலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல் மகள் சவுமியா (31). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இனியவன் வீட்டுக்கடன் வாங்குவதற்காக, சவுமியா வேலை செய்த வங்கிக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. பின்னர் இனியவன்- சவுமியா தம்பதியர் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடிபெயர்ந்தனர்.

    இந்தநிலையில் இனியவன் மருத்துவ பயிற்சிக்காக 6 மாதங்களுக்கு வெளியூருக்கு செல்ல வேண்டியிருப்பதால் மனைவி சவுமியாவை சேலத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டில் சென்று இருக்குமாறு கூறினார்.

    இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்து தனது தாயாரின் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சவுமியா சடலமாக மீட்கப்பட்டார்.

    இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த டாக்டர் இனியவன் மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அம்மாபேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலை டாக்டர் இனியவன் குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் விஷத்தை கலந்து தனது உடலில் செலுத்தி கொண்டு வீட்டில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மாபேட்டை போலீசார் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி தற்கொலை செய்த நிலையில் சில நாட்களில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×