search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரும்பு கதவில் விழுந்ததில் கம்பி குத்தி உயிருக்கு போராடிய நாய்- அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர்
    X

    இரும்பு கதவில் விழுந்ததில் கம்பி குத்தி உயிருக்கு போராடிய நாய்- அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர்

    • ஸ்நூசி நாய் மிகவும் புத்திசாலித்தனமானது. அனைவரிடமும் பாசமாக பழகும்.
    • பிறந்த மற்ற குட்டிகள் இறந்தபோதும் மரணத்தை வென்று உள்ளது.

    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றி வந்தது.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 4 குட்டிகளை ஈன்ற அந்த நாய் இறந்துபோனது. இதனால் பரிதாபப் பட்ட அப்பகுதி மக்கள் பிறந்து சில நாட்களே ஆன 4 நாய்க்குட்டிகளுக்கும் உணவு கொடுத்து பராமரித்தனர். ஆனால் சில நாட்களிலேயே அதில் மேலும் 3 நாய்குட்டிகள் இறந்து போனது.

    இதைத்தொடர்ந்து மீதம் இருந்த ஒரு நாய்க்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஸ்நூசி என்று செல்லமாக பெயர் வைத்து வளர்த்தனர். அந்த நாயும் அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் பாசமாக பழகியது. இதனால் அப்பகுதியில் ஸ்நூசி நாய் பிரபலமாக வலம் வந்தது.

    இதற்கிடையே அந்த நாயை வளர்த்து வந்த குடும்பத்தினர் வீடு மாற்றலாகி வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்கள் செல்லும் புதிய வீட்டில் விலங்குகளை வளர்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அந்த குடும்பத்தினர் கனத்த இதயத்துடன் ஸ்நூசியை அப்பகுதியில் வசிக்கும் ஷமீம் என்பவரிடம் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் அவர் வெளியில் செல்லும் போது நாயை வீட்டின் 2-வது மாடியில் விட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் வழக்கம் போல் ஷமீம் வேலைக்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டின் இரும்பு கேட்டில் உள்ள கம்பியில் குத்திய நிலையில் நாய் உயிருக்கு போராடியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நாயை மீட்க முயன்றபோது முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அருகில் கட்டிட பணியில் இருந்த தொழிலாளர்களை வரவழைத்து இரும்பு கம்பியை துண்டாக அறுத்து நாயை மீட்டனர். பின்னர் அதனை அடையாறில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர் ஜோசிகா நாவுக்கரசு மற்றும் ஊழியர்கள் காயம் அடைந்த நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது நாய் நலமாக உள்ளது. வீட்டின் 2-வது மாடியில் இருந்து நாய் கீழே விழுந்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து ஷமீம் கூறும்போது, 'ஸ்நூசி நாய் மிகவும் புத்திசாலித்தனமானது. அனைவரிடமும் பாசமாக பழகும். அதன் தாயார் இறந்த போதும், அதனுடன் பிறந்த மற்ற குட்டிகள் இறந்தபோதும் மரணத்தை வென்று உள்ளது.

    தற்போது இரும்பி கம்பியில் விழுந்தும் உயிர் பிழைத்து இருக்கிறது. வெளியில் செல்லும் நேரத்தில் நாயை பராமரிப்பது கடினமாக உள்ளது. இதனை விருப்பப்பட்ட வர்கள் வாங்கி பராமரிக்கலாம்' என்றார்.

    இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோசிகா நாவுக்கரசு கூறும்போது, 'காயம் அடைந்த நாய்க்கு அறுவை சிகிச்சை மூலம் குத்தி இருந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து நாய் நலமாக உள்ளது.

    எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கம்பி குத்தியதில் அதன் உள்உறுப்புகள் ஏதுவும் பாதிக்கப்பட வில்லை என்பது உறுதியானது' என்றார்.

    Next Story
    ×