search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஸ்சில் புகுந்து டிரைவருக்கு அரிவாள் வெட்டு: போக்குவரத்து பணிமனையில் டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டம்
    X

    பாபநாசம் போக்குவரத்து பணிமனையில் கண்டக்டர்கள்- டிரைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பஸ்சில் புகுந்து டிரைவருக்கு அரிவாள் வெட்டு: போக்குவரத்து பணிமனையில் டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டம்

    • பஸ்சின் குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் இருந்த 2 பேரும் இறங்கி பஸ்சில் ஏறினர்.
    • வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    சிங்கை:

    பாபநாசத்தில் இருந்து அம்பை, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை வழியாக நெல்லைக்கு நேற்று மாலையில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது.

    பஸ்சை குமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்த ரெஜி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். தென்காசி மாவட்டம் இடைகாலை சேர்ந்த கண்ணன் (35) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையம் அருகே பஸ் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் பஸ்சின் குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் இருந்த 2 பேரும் இறங்கி பஸ்சில் ஏறினர்.

    இதனை தொடர்ந்து பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது டிரைவர் மற்றும் கண்டக்டர் அந்த 2 பேரையும் கண்டித்ததாகவும், அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அந்த நபர்கள் 2 பேரும் தங்களை பஸ்சில் ஏற்றிவிட்ட மற்றொரு நபரை வரவழைத்தனர். அங்கு அரிவாளுடன் வந்த அந்த நபர் வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் பஸ் நிற்கவும், அதில் புகுந்து டிரைவரை சரமாரி வெட்டினார். அப்போது அவர்களை தடுக்க வந்த கண்டக்டருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த 3 பேரும் தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த 2 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே டிரைவர்-கண்டக்டர் வெட்டப்பட்டதை கண்டித்து இன்று அதிகாலை பாபநாசம் போக்குவரத்து கழக பணிமனையில் மற்ற டிரைவர்கள்-கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், அரிவாள் வெட்டில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும், படுகாயம் அடைந்த டிரைவர் உடல்நலம் குணமாகும் வரையிலும் அவரது பெயரை விடுப்பு எடுத்தவர்கள் பட்டியலில் சேர்க்க கூடாது என்று கூறினர். அவர்கள் அதிகாலை 3.30 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் அவதிபட்டனர்.

    Next Story
    ×