search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்- குலசேகரன்பட்டினத்தில் 10 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
    X

    வேடம் அணிந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள்

    தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்- குலசேகரன்பட்டினத்தில் 10 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

    • இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல்வேறு தசரா குழுவினர் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி சென்றனர்.

    வேண்டுதல்கள் நிறைவேற கடும் விரதம் இருந்து காளி, அம்மன் போன்ற சுவாமி வேடங்கள், குரங்கு, சிங்கம், பெண் போன்ற 100-க்கு மேற்பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து அதில் நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, செண்டை மேளம், கரகம், காவடி, டிஸ்கோ போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    தசரா குழுவினரின் கலை நிகழ்ச்சி மிகவும் அசத்தலாக இருந்தது. 10-ம் திருநாளான விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வசூல் செய்த காணிக்கையை செலுத்த தொடங்கினார்கள். இன்று பிற்பகல் வரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

    இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர். இரவில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    இதற்காக 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் வரும் தனியார் வாகனங்ளை நிறுத்த 30 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது.

    மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு துறை என மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறையினர் குலசையில் முகாமிட்டுள்ளனர்.

    9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி

    திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வோறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மேலும் தினமும் கோவில் கலையரங்கத்தில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இன்றும் காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் கோவில் முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைவார். அங்கு காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

    காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்கிறார். பின்னர் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களையுதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. நாளை மறுநாள் (14-ந் தேதி) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன், செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் அறங்காவலர்கள் ரவிந்திரன் குமரன், மகராஜன், கணேசன், வெங்கடேஷ்வரி மற்றும் மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர்.

    திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி.வசந்தராஜன் தலைமையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தசரா உடை அணிந்த போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×