என் மலர்
தமிழ்நாடு
ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: ஆவணங்களை கைப்பற்றி அதிரடி விசாரணை
- தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை குறி வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- அமலாக்கத்துறையினர் கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட நிறுவனங்களை கண்காணித்து வந்தனர்.
சென்னை:
தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை குறி வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று ரியல்-எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தி.நகரில் ரியல்-எஸ்டேட் அதிபர் ஒருவரின் வீட்டில் இன்று காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். தி.நகர் சரவணா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சையை சேர்ந்த இவர் ரியல்-எஸ்டேட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர் ஆவார். இதை தொடர்ந்து ரியல்-எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்திருப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இதேபோன்று தஞ்சையில் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
30 இடங்களிலும் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரியல்-எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் பற்றிய விவரங்களை சேகரித்த அமலாக்கத்துறையினர் கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட நிறுவனங்களை கண்காணித்து வந்தனர்.
இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்று வருகிறது. ரியல்-எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள பணம் எந்த வகையில் திரட்டப்பட்டது? முதலீடு தொடர்பாக முறையான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் சில நிறுவனங்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை தொடர்ந்தே சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை முடிவில்தான் ரியல்-எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் என்னென்ன? என்பது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்.