search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் கட்டணம் உயர்வு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
    X

    மின் கட்டணம் உயர்வு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

    • தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன.
    • உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு - தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு.

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83% அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு. ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம்.

    தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்.

    ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டி அதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு.

    ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்" தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×