search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதி மனிதர்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணி தொடங்கியது
    X

    ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதி மனிதர்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணி தொடங்கியது

    • முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் முதல் கட்டமாக இன்று அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது.
    • ஆதிச்சநல்லூரில் இதுவரை புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் வாழ்விடப் பகுதியில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 3 இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

    இந்த அகழாய்வு பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடப் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது. இந்த பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெற்றது.

    இந்நிலையில் தொடர்ந்து ஆதிச்சநல்லூர் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கு அனுமதி பெற உள்ளதாகவும் அனுமதி கிடைத்த பின்னர் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த வருட இறுதியில், ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய 5 இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் அகரம், கொங்கராயகுறிச்சி, கால்வாய், கருங்குளம், திருக்கோளூர் ஆகிய 5 இடங்களில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் முதல் கட்டமாக இன்று அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த அகழாய்வு பணிகள் நடைபெறும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆதிச்சநல்லூரில் இதுவரை புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் வாழ்விடப் பகுதியில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த பணிகளை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், ஏரல் தாசில்தார் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆய்வாளர் எத்தீஸ் குமார், முத்துக்குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×