search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி சென்னையில் 100 பேரை ஏமாற்றி லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பல் கைது-  பரபரப்பு தகவல்கள்
    X

    ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி சென்னையில் 100 பேரை ஏமாற்றி லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பல் கைது- பரபரப்பு தகவல்கள்

    • கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை முகப்பேரை சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் பகுதி நேர வேலை செய்வதற்காக ஆன்லைனில் தன்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பின்னர் டெலிகிராம் மூலம் மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை நம்பி அவர்கள் கொடுத்த இரண்டு வங்கி கணக்குகளுக்கு ரூ.18 லட்சத்து 23 ஆயிரம் வரையிலான பணத்தை டெபாசிட் செய்ததாகவும் கூறினார்.

    ஆனால் தான், செலுத்திய தொகை ஏதும் தனக்கு திரும்ப வரவில்லை என்றும் புகார் அளித்திருந்தார்.

    இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புகார்தாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மோசடி வங்கி கணக்கில் இருந்து செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. விசாரணையில் குற்றவாளிகள் சென்னை ஐ.சி.எப்.-ல் இருந்து இந்த குற்றத்திற்காக வங்கி கணக்குகள் தொடங்கி அதனை வெளிநாட்டில் இருக்கும் மோசடிகாரர்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றியது தெரியவந்தது.

    இது தொடர்பாக டார்லா பிரவீன்குமார், சண்டீபன், ராஜூ, அசோக்குமார், வீரராகவன், பிரவீன்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போலியாக ஒரு வங்கி கணக்கு தொடங்க முதலில் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டதாகவும் பிரதி மாதம் ரூ.30 ஆயிரம் வரை பெற்றதாக டார்லா பிரவீன்குமார் தெரிவித்ததன் பேரில் அதற்கு உதவிய அசோக் குமார் மற்றும் ராஜூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அசோக்குமார் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் பேரில் வீரராகவன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்ற செயலுக்காக பயன் படுத்தப்பட்ட 7 செல்போன் கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

    இவர்களின் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் முடக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட எதிரிகள் ஏற்கனவே மும்பை, இஸ்லாபூர் காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

    ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஈர்க்கப்படுகிறார்கள்.

    மேலும் அவர்கள் டெலிகிராமில் ஒரு குரூப்பில் இணைக்கப்பட்டு யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது, ஓட்டல்களுக்கு ரிவியூ எழுதுவது அல்லது கிரிப்ட்டோ கரன்சியில் டிரேடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆரம்பத்தில் ரூ.150 முதல் ரூ.1000 வரை லாபம் பெற்றுள்ளனர்.

    பின்னர் அவர்களை டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைத்து மோசடி செய்து உள்ளனர். இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டவர்களை மோசடிக் கும்பல் ஏமாற்றியிருப்பது தெரியவந்து உள்ளது.

    எனவே ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1930 என்ற ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணைய தளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

    Next Story
    ×