என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நீலகிரியில் கடும் குளிரால் பொதுமக்கள் பாதிப்பு: மழையால் ரெயில் சேவை ரத்து
- இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
கோவை:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, அரவேணு, அருவங்காடு, பர்லியார், காந்தல், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் வேறு வழியின்றி, மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனர்.
இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிளாஸ்டிக் கவரினை அணிந்தபடி தேயிலை பறிப்பில் ஈடுபட்டனர். மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் பெரும்பாலானவா்கள் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்தவாறு வெளியில் நடமாடினர். வேன் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே வாகனத்தை இயக்கி சென்றனர்.
கோத்தகிரியில் 9 மி.மீட்டர் மழையும், கொடநாட்டில் 2 மி.மீ, கீழ்கோத்தகிரியில் 69 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்றும் வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு வெயில் சற்று குறைந்து இதமான காலநிலை நிலவியது.
இன்று காலை முதல் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
வால்பாறையில் நேற்று இரவு நேரத்தில் வால்பாறை, அக்காமலை, பச்சமலை, நடுமலை, கருமலை, கவர்கள், சோலையார் அணை, முடீஷ் போன்ற எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தோட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி சின்கோனாவில் 31 மில்லி மீட்டர் மழையும்,சின்னக்கல்லார் 16 மில்லிமீட்டர் மழையும், வால்பாறையில் 19 மில்லி மீட்டர் மழையும், சோலையார் அணை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு முதல் மழை பெய்தது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர். குடைபிடித்தபடி அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்