search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தால் அழிந்து போன நெல் நாற்றுகள்: பெரும் நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்
    X

    தலைவர் மாணிக்கம். பெரு வெள்ளத்தால் அழிவு நிலையில் கிடக்கும் நெல் நாற்றுகளை படத்தில் காணலாம்.

    வெள்ளத்தால் அழிந்து போன நெல் நாற்றுகள்: பெரும் நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்

    • ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் பொய்யான்குளம், நத்தகுளம், நல்லூர் கீழ்க்குளம் ஆகியவற்றின் வழியாக ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் விவசாய நிலங்கள் உள்ளன.

    நடப்பு பருவமழை காலத்தில் இந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. உழவு செய்து உரமிட்டு விதைக்கப்பட்ட பிறகு அடுத்ததாக நாற்று நடும் பணியை தொடங்க இருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் 2 நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்தது.

    இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தின் வேக ஓட்டம் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு அடித்து செல்லப்பட்டுவிட்டன.

    இதனால் ஏற்கனவே உழவிட்டு உரமிட செலவு செய்தது, விதைநெல் வீணானது ஆகியவற்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் தாண்டி மீண்டும் வயலை சீர்படுத்தி மறு விவசாயத்தை தொடங்கலாம் என்றால், விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    விவசாயிகள் கடந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த விதை நெல் முழுவதுமாக வெள்ளத்தோடு போய்விட்ட நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மாற்று ஏற்பாடுகளை செய்ய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விவசாய அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அங்கும் விதைநெல் கைவசம் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. வேறு இடங்களில் இருந்து உடனடியாக இங்கு விதை நெல் வரவழைத்து தர வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது பற்றி நத்தகுளம் விவசாய சங்க துணை தலைவரான ஆறுமுகநேரி மாணிக்கம் கூறியதாவது:-

    தற்போதைய பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர், ஆறுமுகநேரி வட்டார பகுதியில் பிசான சாகுபடி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கையிருப்பு விதை நெல் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகளிடம் இருந்து மழை வெள்ளத்தால் அழிந்து விட்டது. மீதி 20 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே நெல் வித்துகள் கைவசம் உள்ளன. நிலைமையை புரிந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் வேளாண் துறையினர் வேறு மாவட்டங்களில் இருந்து நெல் வித்துகளை இங்கு வரவழைத்து தரவேண்டும்.

    அப்படி தந்தால் கூட காலதாமதமான விவசாயம் என்ற வகையில் முளைக்கும் பயிர் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    இதனால் மறு விவசாயத்திலும் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் நிலையே தெரிகிறது. அதனால் பாரம்பரிய நெல் விதைகளை தவிர்த்து விட்டு இந்த முறை நோய்களை தாக்குப்பிடிக்கக் கூடிய ஒட்டு ரக விதைகளுக்கு அரசின் வேளாண் துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விவசாயத்தின் பாதிப்பை குறித்து உடனடியாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×