search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெல்டா மாவட்டங்களில் எஞ்சிய குறுவையை காப்பாற்ற உரிய நீர் கிடைக்குமா?: காத்திருக்கும் விவசாயிகள்
    X

    ஜீவக்குமார்

    டெல்டா மாவட்டங்களில் எஞ்சிய குறுவையை காப்பாற்ற உரிய நீர் கிடைக்குமா?: காத்திருக்கும் விவசாயிகள்

    • தஞ்சை மாவட்டத்தில் இலக்கை விஞ்சி 1.6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன.
    • தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காமல் கர்நாடகா தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    சரியான தேதியில் திறக்கப்பட்டதாலும், குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாலும் விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடியை மேற்கொண்டனர். 5½ லட்சம் ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 5.20 லட்சம் ஏக்கரை தாண்டி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் இலக்கை விஞ்சி 1.6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இன்றைய நிலவரப்படி 47 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    மேலும் கர்நாடகா அரசும் தமிழத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் வஞ்சித்து வருகிறது. இதனால் போதிய தண்ணீரின்றி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கின.

    உரிய நீரை வழங்கக்கோரி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை. தமிழ்நாடு அரசும் அழுத்தம் கொடுத்தும் கர்நாடகா அரசு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது.

    காவிரியில் இருந்து உரியநீரை வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு வருகிற 21-ந் தேதி புதிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

    இப்படி விவசாயிகள் போராட்டம் வழியாகவும், தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும் உரிய நீரை பெற போராடி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களின் நிலைகள் குறித்து நேற்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் உத்தரவுப்படி வேளாண் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு அறிக்கையாக தயார் செய்தனர்.

    இன்று சென்னையில் குறுவை சாகுபடி பாதிப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளை சமர்பிக்கின்றனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் குறுவை சாகுபடி பாதிப்புக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில் டெல்டாவில் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும், அடுத்து சம்பா சாகுபடியை உறுதியாக தொடங்கலாமா என்பது குறித்தும் விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜீவக்குமார்:

    தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காமல் கர்நாடகா தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இலக்கை மிஞ்சி சாகுபடி செய்யப்பட்டாலும் தண்ணீரின்றி பெரும் அளவில் பயிர்கள் பாதிப்புகுள்ளாகின. டெல்டா மாவட்டம் முழுவதும் இதே நிலை தான்.

    ஏற்கனவே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரை மிக மிக குறைந்த அளவே வழங்கியது. இவ்வளவுக்கும் கோர்ட் உத்தரவிட்டும் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் உரிய நீரின்றி டெல்டாவில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதே நிலை நீடித்தால் பயிர்களின் பாதிப்பு அதிகமாவதோடு நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக குறையும் அபாயம் உள்ளது. இன்னும் சில நாட்களில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறையும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால் பயிர்கள் முற்றிலும் கருகி விடும். கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் வீணாகி வருகிறதே என ஒவ்வொரு விவசாயிகளும் கவலையில் உள்ளனர்.

    எனவே இன்று சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டாவில் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். அடுத்து சம்பா சாகுபடியை தொடங்கலாமா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் சம்பா சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

    தற்போது எஞ்சிய பயிர்களை காப்பாற்றவதற்காக நீர் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

    Next Story
    ×