search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்குவரத்து விதிமீறல்களுக்கு தாறுமாறாக அபராதம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

    • தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
    • சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    சென்னை:

    போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு, திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய அபராத தொகையை பல மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 (பழைய அபராதம் ரூ.100), செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தவர்களுக்கு ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000, பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2,500, வாகனம் உரிமம் தொடர்பாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அதுதெரிந்தே அவருடன் பயணிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கத் தொடங்கி உள்ளனர்.

    சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன்மூலம் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துக்கு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக காவல்துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×