search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூரில் பழைய இரும்பு கடையில் தீ விபத்து- 25 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு
    X

    திருவள்ளூரில் பழைய இரும்பு கடையில் தீ விபத்து- 25 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

    • ஜனார்த்தனம் திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார்.
    • தீவிபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஜனார்த்தனம். இவர், அதே பகுதி திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. அங்கிருந்த பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் வேகமாக தீப்பற்றி எரிந்ததால் அதனை அணைக்க முடியவில்லை. அப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் விநாயகமூர்த்தி, ஞானவேல் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீயை கட்டுப்படுத்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பூண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களுக்கு மின்சாரம் தடைபட்டது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×