search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 1000 வீடுகளை 4-வது நாளாக சூழ்ந்து நிற்கும் தண்ணீர்
    X

    காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 1000 வீடுகளை 4-வது நாளாக சூழ்ந்து நிற்கும் தண்ணீர்

    • தொடர் கனமழை காரணமாக தற்போது கீழ்க்கதிர்பூர், மேல்கதிர்பூர், கீழம்பி, மேலம்பி, செவிலிமேடு உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த 2015 க்கு பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்தபாலு செட்டிசத்திரம் பகுதியில் பாலாறில் இருந்து கிளை ஆறாக வேகவதி உருவாகி காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் 9 கிலோ மீட்டர் பாய்ந்து வாலாஜாபாத் அருகே உள்ள திருமுக்கூடல் பகுதியில் மீண்டும் பாலாற்றுடன் இணைகிறது. வேகவதி ஆற்றின் மொத்தம் நீளம் 18 கிலோமீட்டர் ஆகும்.

    தொடர் கனமழை காரணமாக தற்போது கீழ்க்கதிர்பூர், மேல்கதிர்பூர், கீழம்பி, மேலம்பி, செவிலிமேடு உள்ளிட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரின் வேகவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நாகலத்துமேடு, முருகன்குடியிருப்பு, தாயராம்மன்குளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.

    இதையடுத்து தாழ்வான இடங்களில் வசித்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. வேகவதி ஆற்றில் 2500 கன அடி நீர் செல்வதால் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காஞ்சிபுரம் தாட்டி தோப்பு முருகன் காலனி, எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி நகர், நாகலத்து மேடு, தாயாரம்மன், குளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 1000 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. 4-வது நாளாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆற்றின் குறுக்கே இருந்த 4 தரைப்பாலங்கள் முற்றிலும் உடைந்து உள்ளன. மேலும் 5 தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த 2015 க்கு பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வேகவதி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு மேல் கதிருப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்களை குடியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×