search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புழல்-ஆவடி, தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தீவாக மாறிய குடியிருப்புகள்- 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
    X

    புழல்-ஆவடி, தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தீவாக மாறிய குடியிருப்புகள்- 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

    • தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தீவுகள் போல மாறியுள்ளன.

    சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத் தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் நேற்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.

    இதே போன்று தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதி களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

    ஆவடி மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500-க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கீழ்தளத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் மழை தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அந்த பகுதியில் தேங்கிய மழைநீரை குழாய்கள் மூலமாக வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று மழை பாதிப்பு வரும் காலங்களில் ஏற்படாத வகையில் அதிகா ரிகள் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மழை வெள்ளத்தில் நாய், பூனை போன்ற விலங்குகளும் செத்து கிடப்பதால் துர்நாற்றம் வீசு கிறது. அந்த பகுதியில் மின் கம்பிகளும் பொது மக்களை அச்சுறுத்தம் வகையில் இருப்பதாகவும் அதையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அம்பத்தூர் ஆவின் பகுதியில் உள்ள பட்டரவாக்கம் காந்திநகர், ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு மின் வாரிய காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் வெள்ளம் போல தேங்கியது.

    இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு சென்றவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.

    செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று புழல் பகுதியில் மட்டும் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    இதனால் நேற்று வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இன்று காலை 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு கடலை சென்று அடைகிறது.

    இதனால் தண்ணீர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள சாமியார் மடம், வட பெரும் பாக்கம், வடகரை ஆகிய பகுதிகளில் மழைநீர் குடியி ருப்புகளில் புகுந்து பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விளாங்காடுபாக்கத்தில் உள்ள மல்லிகாநகர் நியூ ஸ்டார் சிட்டி விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் மற்றும் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் உள்ள சன் சிட்டி, விவேக் நகர் ஆகிய நகரங்களில் வெள்ள நீர்புகுந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புழல் விளாங்காடுபாக்கம் ஊரை ஒட்டியுள்ள மல்லிகா கார்டன், தாய் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

    குறிப்பாக நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் இருந்து வெளியேறும் மழை வெள்ளம் அந்த பகுதி யில் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. அந்த பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகளும் அப்பகுதி மக்களை அச்சு றுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இந்த பாதிப்பில் இருந்து விடிவு காலம் பிறக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு மழை காலத்திற்குள்ளாவது தங்களது பகுதியில் நீடிக்கும் வெள்ள பாதிப்புகளை மாதவரம் எம்.எல்.ஏ. சுதர் சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகி யோர் தீர்த்து வைப்பார் களா? என்றும் அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    விளாங்காடுபாக்கம் ஊருக்குள்ளும் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

    இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்காலங்களில் நீடிக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பு களை அதிகாரிகள் சரி செய்துதர வேண்டும் என்பதே அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×