search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திம்பம் மலைப்பாதை வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ
    X

    திம்பம் மலைப்பாதை வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

    • காட்டுத் தீயால் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள மரம், செடிகள், கொடிகள் எரிந்து நாசமாகி வருகின்றது.
    • காட்டுத்தீயை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, ஜீர்கள்ளி, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம், விளாமூண்டி மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சி நிறைந்த பகுதியாக மாறி உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது.

    இதனால் வன விலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது. வன விலங்குகள் தண்ணீர் இருக்கும் பகுதியான மாயாறு பகுதிக்கு செல்ல தொடங்கி விட்டன.

    இந்நிலையில் தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீயால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் பற்றி எரிந்து வருகிறது. பல அபூர்வ மூலிகை செடிகளும் எரிந்து நாசமானது. அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், மலை உச்சியில் இருப்பதாலும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமலும் சம்பவ இடத்துக்கு இடத்துக்கு செல்ல முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    இந்த காட்டுத் தீயால் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள மரம், செடிகள், கொடிகள் எரிந்து நாசமாகி வருகின்றது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக வனப்பகுதியில் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு இன்று வனத்துறையினர் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×