search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?- அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தங்கமணி சவால்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?- அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தங்கமணி சவால்

    • மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம்.
    • மின்வாரியத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மூன்று முறை கடுமையாக மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும் தமிழ் நாடு மின்சார வாரியத்தை நஷ்டத்தில் இயக்கும் நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்ததில் இருந்தே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் என்ன நடந்தது என்பதையும், என்ன நடக்கிறது என்பதையும் அவர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது நன்கு புரிகிறது.

    உதய் திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டதால் கிடைத்த நன்மைகளை நான் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, 2017 முதல் 2021 வரை சட்ட மன்றத்திலும், பிறகு இன்று வரை பலமுறை ஊடகங்கள் வாயிலாகவும், அறிக்கைள் வாயிலாகவும், பொது மேடையிலும் விளக்கியுள்ளேன். மேலும், நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன் என்றும் தி.மு.க. அரசின் அமைச்சர்களுக்கு சவால் விடுத்துள்ளேன்.

    எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி, தி.மு.க. அரசு மின்கட்டணத்தை மூன்றாம் முறையாக உயர்த்தியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், அ.தி.மு.க.வின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.

    தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, விலைவாசி உயர்வுக்கு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுக்கு என்று பல்வேறு வகைகளில் தமிழக மக்களிடம் தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மின்கட்டண உயர்வைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் கிடைத்த வரவேற்பைப் பொறுக்க முடியாமல், அமைச்சர் தங்கம் தென்னரசு மின் கட்டண உயர்வுக்கு உதய் திட்டத்தில் நாங்கள் கையெழுத்திட்டதுதான் காரணம் என்று பழைய பல்லவியை பாடியுள்ளார்.

    நான் தி.மு.க. அரசுக்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது இதுதான். உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும், தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதையும், தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை என்பதையும், மின்சாரத் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு குறிப்பிடும் நாளில், அவருடன் நான் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். அவர் தயாரா?

    மூன்றாண்டு ஆட்சிக்குப் பிறகும், மூன்று முறை கடுமையான மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும், தங்களது நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்க முடியாமல் உள்ளதை மறைக்க, எங்கள் மீது பழிபோடுவதை விட்டு விட்டு, இனியாவது தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×