search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மஞ்சு விரட்டு, எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 4 பேர் பலி
    X

    மஞ்சு விரட்டு, எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 4 பேர் பலி

    • பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
    • காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்ற பார்வையாளர் உயிரிழந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 600-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    போட்டியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தார்.

    இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றன.

    வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, கட்டில், குக்கர், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் சீறிபாய்ந்து ஓடிய காளைகள் அங்கு திரண்டிருந்தவர்கள் பலரை முட்டிவிட்டு சென்றன. காளைகள் முட்டியதில் 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலும் பார்வையாளராக வந்திருந்த மதுரை மாவட்டம் சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 52) என்பவர், மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர், விவசாயி பெரியபுலியன் (வயது 80). மாட்டு பொங்கல் அன்று அதே பகுதியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோவில் அருகே நடந்து சென்றார். அந்த பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட காளை ஒன்று, அந்த வழியாக ஓடிவந்தது. திடீரென அந்த காளை பெரியபுலியனை முட்டி தள்ளியது. படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி ஐயா கோவில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது.

    இதில் காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் (50) என்ற பார்வையாளர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (72) என்ற மூதாட்டி சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மாடு மூதாட்டியை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

    இவ்வாறு வெவ்வேறு இடங்களில் நடந்த மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

    Next Story
    ×