search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஜி20 கல்வி பணிக்குழு கூட்டம்- விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
    X

    சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஜி20 கல்வி பணிக்குழு கூட்டம்- விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு

    • வரவேற்பு பதாகைகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
    • பிரதமர் மோடியின் படம் மட்டுமே விளம்பர பதாகையில் இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெறவில்லை.

    ஆலந்தூர்:

    2023-ம் ஆண்டுக்கான ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்று இருக்கிறது. ஜி20 உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜி 20 அமைப்பு சார்பில், நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி ஜி20 கல்வி பணிக்குழுவின் முதல் கூட்டம் நாளை ( 31-ந்தேதி) முதல் வருகிற 2-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். 31-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யிலும், பிப்ரவரி 1,2 ஆகிய தேதிகளில், சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஓட்டலிலும் கூட்டம் நடக்க இருக்கிறது.

    இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள், தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வெளிநாட்டு பிரதிநிதிகளை விமான நிலையத்தில் இருந்து, தகுந்த பாதுகாப்புடன் அவர்கள் தங்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    மேலும் அவர்களை வரவேற்கும் விதத்தில், சென்னை விமான நிலையத்தில் மலர் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டு, வரவேற்பு பதாகைகளும் விமான நிலையத்தின் உள்பகுதியில் இருந்து, வெளிப்பகுதி வரை வைக்கப்பட்டுள்ளது.

    அந்த வரவேற்பு பதாகைகளில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் படம் மட்டுமே அந்த விளம்பர பதாகையில் இடம்பெற்றுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இல்லை. பெயரும் இடம் பெறவில்லை.

    இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, இந்த வரவேற்பு பதாகைகள் அனைத்தும், ஜி20 மாநாட்டு குழுவால் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பதாகைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×