என் மலர்
தமிழ்நாடு
ககன்யான் திட்டம்: விண்வெளிக்கு செல்லும் குழுவில் இடம்பெற்ற தமிழர்... யார் அவர்?
- ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார்.
- ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர்
ககன்யான் திட்டப் பணிகளை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆளுநர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இருந்தனர்.
இதையடுத்து, ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பிறந்த இவர், உதகையில் உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் படித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்று 2003-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்த இவர், சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.