search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை வெள்ளத்தை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடித்த கும்பல்: 60 பவுன் நகை-ரூ.3 லட்சத்தை அள்ளிச்சென்றனர்
    X

    மழை வெள்ளத்தை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடித்த கும்பல்: 60 பவுன் நகை-ரூ.3 லட்சத்தை அள்ளிச்சென்றனர்

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்றதால் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர். மேலும் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் ஹெலிகாப்டர்களிலும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து உள்ளதால் வீடுகளுக்கு மக்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

    மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மற்றும் பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.

    இதற்கிடையே முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதியில் பொதுமக்கள் திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். அப்போது வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    வரதராஜபுரம் பகுதியில் விஷ்னு என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கனமழை காரணமாக முடிச்சூர் முழுவதும் மழை நீரால் மூழ்கி போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சரத்குமார் என்பவர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், கண்ணண் என்பவரது வீட்டில் 15 நகை, விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, அருண் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை என மொத்தம் 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை அள்ளிச் சென்று உள்ளனர்.

    சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மற்றும் வாங்கிய நகைகளை மழை வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பதை கண்டு அதனை பறி கொடுத்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே அதே பகுதியில் 3 மாதத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை தற்போது மீண்டும் கை வரிசை காட்டி உள்ளனர்.

    மழைவெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும் அவசரத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் ரொக்கப்பணத்தை பெரும்பாலானோர் அப்படியே விட்டுச்சென்று இருந்தனர்.

    வெள்ளத்தின் போது பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர். மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் முடிச்சூர் பகுதியிலும் சில வீடுகளில் கொள்ளை நடந்து உள்ளது. இது தொடர்பாகபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவுவது போல் நடித்து மனிதாபிமானம் இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×